ஈரோடு: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,  ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள்தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.  கூட்டணி பேரங்களும், தொகுதி பேரங்களும் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக செயலாற்றி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தினசரி பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று மக்களிடையே பிரபலமாகி வருகிறார். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டக் கழகங்களின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை சிறப்புப் பொதுக் கூட்டத்தில்  ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது,  ஈரோடுதான் எல்லாவற்றுக்கும் தொடக்கம்; ஆரம்பம். தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை; திராவிட இயக்கம் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்களை உருவாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் இல்லாவிட்டால் பேரறிஞர் அண்ணா இல்லை. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா இல்லாவிட்டால் கலைஞர் இல்லை. கலைஞர் அவர்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; நாம் இல்லை! இந்த வரிசையில் பார்த்தால் அனைத்துக்கும் தொடக்கம் பெரியார் பிறந்த இந்த ஈரோடு மண்தான்.

புதுவையில் “பழனியப்பன்” என்ற நாடகத்தில் சிவகுருவாக நடித்ததற்காக தாக்கப்பட்ட கலைஞரை, தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டுக்கு அழைத்து வந்து குடிஅரசு இதழில் துணையாசிரியராக ஆக்கினார். அந்தவகையில் தலைவர் கலைஞர் வேலை பார்த்த இடம் இந்த ஈரோடு!

திராவிடர் கழகத்துக்குக் கொடியை உருவாக்க முயற்சித்தபோது, கருப்பு மையால் கருப்பு வண்ணத்தை வரைந்து, சிவப்பு மை இல்லாததால் தலைவர் கலைஞர் அவர்கள் தனது விரலில் குண்டூசியால் குத்தி தனது ரத்தத்தால் வண்ணம் பூசிய அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்த ஊரும் இந்த ஈரோடுதான்.

அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த பிறகு, கலைஞரின் குருகுலமான ஈரோட்டில்தான் அடுத்த சிலையை அமைத்தோம்! இன்னும் சொல்லப்போனால், நான் திறந்து வைத்த முதல் கலைஞர் சிலை, ஈரோட்டில் திறக்கப்பட்டதுதான்! இத்தகைய பெருமை வாய்ந்த மண்ணில் இருந்து ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பரப்புரையைத் தொடங்குவதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

ஈரோட்டில் இருந்து தொடங்கிய அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது. நாமும் வெற்றியைப் பெறுவோம். அந்த நம்பிக்கை நமக்கு 100 சதவிகிதம் இருக்கிறது என்றால், நாட்டு மக்களுக்கு 200 சதவிகிதம் இருக்கிறது. எப்போது தேர்தல் வரும், எப்போது தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் மக்களை நோக்கிய பரப்புரைப் பயணம் இன்று முதல் தொடங்குகிறோம்.

2018-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் நாள் ஈரோட்டில் மண்டல மாநாடு நடந்தது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதுமையின் காரணமாக கோபாலபுரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களால் ஈரோடு மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த மாநாட்டில் நான் பேசும் போது ஐம்பெரும் முழக்கங்களை அறிவித்தேன்.

1971 திருச்சி மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்ததைப் போல 2018 ஆம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் நான் அறிவித்தேன்.

“மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உருவாகி  இருக்கிறது என்ற அந்தப் பெருமையை பரிசை தலைவர் கலைஞரிடத்தில் நான் ஒப்படைக்க வேண்டும்” என்று நான் சூளுரை மேற்கொண்டேன். ஆனால் காலம் நம்மிடம் இருந்து அவரைப் பிரித்துவிட்டது. ஆனாலும் கடமையை மறப்பவர்கள் அல்ல கலைஞரின் பிள்ளைகள் என்பதை நிரூபிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

எந்த ஈரோட்டில் இருந்து, மீண்டும் கழக ஆட்சி என்று சூளுரை மேற்கொண்டேனோ, அதே ஈரோட்டில் தேர்தல் பரப்புரை முதல் கூட்டத்தை நடத்துவதில் பெருமைப்படுகிறேன். சூளுரையை ஒலித்த இடமும் ஈரோடு. அதனை வென்று காட்டும் வகையில் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் ஈரோடு.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொணடிருக்கிறது. இதனை ஆட்சி என்று கூட நான் சொல்லமாட்டேன். இது ஆட்சி அல்ல, ஒரு காட்சி. அவ்வளவுதான். இதனை ஒரு கட்சியின் ஆட்சி என்றுகூடச் சொல்ல முடியாது; ஒரு கும்பலின் ஆட்சி இது. கட்சி என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு தலைமையே இல்லை. யார் தலைவர் என்பதற்குத்தான் கடந்த நான்காண்டு காலமாக முட்டலும் மோதலும் நடக்கிறது. ஆட்சியை வழிநடத்தும் முதலமைச்சருக்கோ துணை முதலமைச்சருக்கோ, அனைத்து அமைச்சர்களும் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஒருவர் கிழக்கே போனால் இன்னொருவர் மேற்கே போவார். ஒருவர் வடக்கே போனால் இன்னொருவர் தெற்கே போவார். இதுதான் அவர்கள் நடத்தும் ஆட்சியின் காட்சி.

அ.தி.மு.க. என்ற கட்சிக்குத் தலைவரும் இல்லை, பொதுச்செயலாளரும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஆளுக்கு ஒரு நேம் போர்டு தயாரித்துக் கொண்டு அதன் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கட்சியும் எல்லா விஷயத்திலும் இரண்டாக இருக்கிறது. எப்போது இரண்டாக உடைந்து விழுமோ என்ற நிலைமையில் ஒரு கண்ணாடித்துண்டு ஒட்டிக்கொண்டு இருப்பதைப் போல அ.தி.மு.க. என்ற கட்சியும் – அவர்களால் ஆளப்படும் அரசும் இருக்கிறது. அவர்களுக்கு கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது.

ஏனென்றால் இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவிக்கு வந்தவர்கள் அல்ல. ஒருவர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவிக்கு வந்தார். இன்னொருவர் சசிகலா காலில் ஊர்ந்து போய் பதவிக்கு வந்தார். உழைக்காமல் நடித்து பதவிக்கு வந்த அவர்கள் இப்போதும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற வேஷங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த மே மாதம் வேடம் கலைத்துவிட்டு கோட்டையை விட்டு அவர்கள் வெளியேறப் போகிறார்கள். வெளியேறப் போகிறார்கள் என்று கூட சொல்ல மாட்டேன், அவர்கள் மக்களால் விரட்டப்பட இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஏனென்றால் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் உருவாக்கிய, உருவாக்க நினைத்த தமிழகத்தை மொத்தமாகச் சிதைக்கும் கும்பல்தான் இந்த எடப்பாடி கூட்டம். இந்தக் கும்பல் கையில் இருந்து கோட்டையை மீட்டாக வேண்டும்.

2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும் பழனிசாமியும் இந்த நாட்டை பத்தாண்டு காலம் ஆண்டுள்ளார்கள். முடிந்தவரை தங்கள் பங்குக்கு தமிழ்நாட்டை அதல பாதாளத்துக்குப் கொண்டு போய்விட்டார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்றார் அம்மையார் ஜெயலலிதா. சிறைக்குச் சென்றார். ஜாமீனில் வெளியில் வந்த பிறகு அவர் ஆக்டிவ் ஆக ஆட்சி செய்யவில்லை.

இறுதியில் உடல்நலமில்லாமல் ஆனார். எப்போது எப்படி எந்தத் தேதியில் இறந்தார் என்பது இதுவரை மர்மமாக இருக்கிறது. அதற்குப் பிறகு அ.தி.மு.க.வில் நடந்த அதிகாரப்போட்டிகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அது ஆட்சியை பாதித்தது.

முதலமைச்சர் நாற்காலியை தக்க வைப்பதற்காக பழனிசாமியும் – முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்காக பன்னீர்செல்வமும் தினந்தோறும் நடத்திய நாடகங்களைத்தான் நான்கு ஆண்டு காலம் பார்த்தோம். இதைத் தாண்டி ஒன்றே ஒன்று நடந்தது அதுதான் கொள்ளை. கொள்ளையடிப்பது ஒன்றே இந்த ஆட்சியின் கொள்கை. அதனால்தான் தமிழகம் எல்லா விதத்திலும் பின் நோக்கிப் போய்விட்டது.

ஆனால் முதலமைச்சரைக் கேட்டால், நான் அங்கே விருது வாங்கினேன், இங்கே விருது வாங்கினேன் என்பார். அவருக்கு யாராவது விருது கொடுத்தார்களா? அல்லது விலை கொடுத்து விருதை வாங்கினாரா என்பது பலத்த ஆராய்ச்சிக்குரியது.

இந்த ஆட்சியை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமானால் பாராட்டலாமே தவிர, வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள். சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் செயல்பாடுகளை பாராட்டுவதாகச் சொன்னார். மோடி எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தியாவில்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டில் ரகசியமாக வாழ்கிறாரா என்று தெரியவில்லை.

ஒரே ஒரு ஆள் கூட கொரோனாவால் பாதிக்கப்பட அம்மாவின் அரசு விடாது என்று சட்டமன்றத்தில் சொன்னார் பழனிசாமி. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதற்கு பழனிசாமியின் பதில் என்ன? இதுவரை 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பழனிசாமியின் பதில் என்ன? இத்தகைய பழனிசாமியைத்தான் மோடி பாராட்டுகிறார். அவர் ஏன் பாராட்டுகிறார்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலகத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 90 லட்சம் பேர் என்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 80 லட்சம் பேர். அமெரிக்காவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 32 ஆயிரம் பேர் என்றால் இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர். இத்தகைய பிரதமர் எடப்பாடியை பாராட்டாமல் வேறு என்ன செய்வார்?

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் இரண்டு அரசுகளும் மக்கள் விரோத, மக்களுக்குச் சம்பந்தமில்லாத அரசுகளாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக இவர்கள் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகளையும் சொல்ல வேண்டியது இல்லை.

அண்மைக்காலமாக இவர்களது செயல்பாடுகளால் மக்கள் அடைந்த பாதிப்புகளே போதும்; இவர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எல்லா விதங்களிலும் மிகமிக மோசமான அரசு தான் இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு.

போலியான பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து விருதுகள் வாங்கிவிட்டதாக வெட்கமில்லாமல் முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார். ஆனால் உண்மையில் இந்த தமிழ்நாடு அதல பாதாளத்தில் கிடக்கிறது என்பது தான் உண்மை!

தமிழகம் தொழில் நடத்த உகந்த மாநிலமாக இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? முதல் காரணம், ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் தலைமைப் பிரச்சினைதான்!

முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றால், பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காகத்தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்! எல்லோரும் அந்தப் பணியில் ஈடுபட போகிறோம்!

தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்துவிட்டது. அதனைத் தட்டிக் கேட்காமல் மாநில அரசு மவுனம் காக்கிறது.

ஒரு காலத்தில் தமிழகம் என்றால் மத்திய அரசும், டெல்லியும் பயப்படும். ஆனால் எடப்பாடி அரசு, இன்றைய தினம் டெல்லியைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசு பறிக்கிறது என்றால், அதை வலியப்போய் தூக்கித் தருகிற அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது.

காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு போய்விட்டது மத்திய அரசு. இனி காவிரி நதிநீர் ஆணையத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. இதனை எதிர்த்தாரா முதலமைச்சர்?

விவசாயிகளின் ஒரே கோரிக்கை, தங்களது விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான். அதற்குக் கூட உத்தரவாதம் தராத மூன்று சட்டங்களை எல்லாருக்கும் முந்திப் போய் ஆதரித்தார் பழனிசாமி. அப்படியானால் அவரது உண்மையான நோக்கம் என்ன?

மக்கள் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு ஆட்சி நிலைத்தால் போதும், கொள்ளை தொடர்ந்தால் போதும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவர் பழனிசாமி. அவரிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டாமா?

தமிழகம் என்ற கம்பீரமான மாநிலத்தை பா.ஜ.க. அரசின் பாதத்தில் ஒரு பூனைக்குட்டியைப் போல படுக்க வைத்துவிட்டார் பழனிசாமி. இந்த இழிநிலையை துடைத்தாக வேண்டும். அதற்காகவே தமிழகம் மீட்கப்பட வேண்டும்.

அதனால்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; ஒரு போர் என்று நான் சொன்னேன். இது,

ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் வாழ்ந்த மண்! பெருந்தலைவர் காமராசர் ஆண்ட மண்! பேரறிஞர் அண்ணா ஆண்ட மண்! முத்தமிழறிஞர் கலைஞர் ஆண்ட மண்! அந்தப் பெருமையை மீட்டாக வேண்டும்!

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற உயரிய தத்துவத்தை இந்தியாவுக்கு வழங்கிய மண், இந்த தமிழ் மண்! அத்தகைய மண், பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனை மீண்டும் மாநில சுயாட்சி மண்ணாகப் பண்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

“ஆதரித்தாலும் எதிர்த்தாலும் இரண்டிலும் உறுதியாக இருக்கக் கூடியவர் கலைஞர்’ என்று பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி அவர்களால் மதிக்கப்பட்ட கலைஞர் வாழ்ந்த தமிழகம், இன்றைய ஆட்சியாளர்களால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் பரிதாபத்துக்குரியவை. கலைஞர் காலத்துக் கம்பீரத்தை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்!

“இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தாலும், உரிமைகளைப் பெறுவதில் தமிழகம் தலைநகராக இருந்தது” என்று பிரதமர் பொறுப்பில் இருந்த தேவகவுடா அவர்கள் கலைஞரைப் போற்றிச் சொன்னார்கள். அத்தகைய உரிமைகளின் தலைநகராக மீண்டும் தமிழகத்தை மாற்றிக் காட்ட வேண்டும்.

சமூகநீதித் தத்துவத்தின் தலைநகராக இருந்தது தமிழகம். இன்று சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டும் மனிதர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதனை மீட்டாக வேண்டும்.

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியாம் ‘ தமிழ் மக்களின் மானம் காக்க, உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்.

அந்த மீட்புப் போருக்கு அனைவரும் அணி அணியாகத் திரண்டு வாரீர் என்று அழைத்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.