வெங்காய விலை குறைவு : நாசிக் விவசாயியின் நூதன போராட்டம்

நாசிக்

வெங்காயத்தின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 1.40 ஆகி உள்ளதால் நாசிக்கை சேர்ந்த விவசாயி ஒருவர் நூதன போராட்டம் நடத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவில் வெங்காயம் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 50% நாசிக் மாவட்டத்தில் பயிர் செய்யப்படுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவில் வசிக்கும் விவசாயி சஞ்சய் சாதே. இவர் விவசாயத்தில் பல நவீன முறைகளை கடைபிடித்து வருகிறார். அதற்காக மத்திய விவசாயத்துறையுடன் பல முறை தொலைபேசி மூலம் அறிவுரைகள் பெற்றுள்ளார்.

கடந்த 2010 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை இந்திய விவசாயிகள் சார்பில் சந்திக்க மத்திய விவசாயத்துறை சஞ்சய் சாதேவை தேர்ந்தெடுத்தது. அவர் அப்போது ஒபாமாவை சந்தித்து பேசி உள்ளார். சஞ்சய் விவசாயத்தில் செய்து வரும் புது முயற்சிகளுக்கு அப்போது ஒபாமா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வெங்காயத்தின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சஞ்சயும் ஒருவர் ஆவார். அவர் இந்த பருவத்தில் 750 கிலோ வெங்காயம் அறுவடை செய்துள்ளார். அந்த வெங்காயத்தை நிபாத் மொத்த சந்தையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அவருக்கு கிலோவுக்கு ரூ.1 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட்து. கடுமையான பேரத்துக்கு பிறகு அவர் ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.40 என முடிவு செய்து 750 கிலோ வெங்காயத்தை ரூ.1064 க்கு விற்பனை செய்துள்ளார். சுமார் 4 மாத கடின உழைப்புக்கு பிறகு இவ்வளவு குறைந்த தொகை கிடைத்ததால் அவர் மன வருத்தம் அடைந்தார்.

விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காத மத்திய அரசை கண்டித்து அவர் தனக்கு கிடைத்த ரூ.1064ஐ அப்படியே பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் சாதே, “நான்கு மாத உழைப்புக்கு வெறும் ரூ.1064 மட்டுமே கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்தேன் . எனது எதிர்ப்பை தெரிவிக்க நான் அந்த தொகையை அப்படியே பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கான மணி ஆர்டர் கமிஷனான ரூ.54 எனக்கு மேலும் செலவானது. நான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்னும் என் கோபத்தை காட்டவே இவ்வாறு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.