15-வது நிதிக்குழு பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்க: திருநாவுக்கரசர்

சென்னை:

தினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

மாநில அரசுகளுக்கு நிதிகளைப் பகிர்ந்து அளிப்பதற்கான பரிந்துரைகளை நிதிக் குழுக்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே,  14-வது நிதிக் குழு பரிந்துரைகள் நடைமுறையால் ஏற்கனவே தமிழகத்துக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தமிழக அரசுக்கு, கடுமையான  நிதிச் சுமை உயர்ந்துள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 15வது நிதிக்குழு பரிந்துரை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்ப தாவது,

மத்திய – மாநில அரசுகளுக்கிடையே வரி வருவாய் பகிர்வையும், தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களின் அளவையும் தீர்மானிப்பதற்காகவே நிதிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது என்.கே. சிங் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் 15வது நிதிக்குழு, 2020 – 2025-ம் ஆண்டு களுக்கான முடிவுகளை எடுக்கிற அதிகாரம் பெற்றுள்ளது. 14-ஆவது நிதிக்குழுவைக் காட்டிலும், நோக்கத்திலும், செயல்பாடுகளிலும் நிறைய  வேறுபாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

இது தென்மாநில அரசுகளிடையே மிகப்பெரிய சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நிதிக்குழுக்கள் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே வருவாய் பகிர்வுகளை செய்து வந்தது. ஆனால், தற்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பின்பற்றுவது தென்மாநில மக்களை கடுமையாகப் பாதிக்கும். இது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும்.

இதுதொடர்பாக ஆலோசிப்பதற்கு தென்மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூட்டியிருந்தார். இதில் தமிழகத்தைத் தவிர, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக ஆகிய மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்புகளை மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்றால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் தமிழக நிதியமைச்சர் அதில் பங்கேற்வில்லையா?

தமிழக நலனைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற  பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக உரிய எதிர்ப்பை தெரிவிக்க அதிமுக அரசுக்கு துணிவில்லை என்பது தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 14 நிதிக்குழுக்கள் மூலமாக பெற்று வந்த உரிமைகளை, வரி வருவாய்களை இழக்கும் வகையில் அமைந்துள்ள 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.