சர்கார் இசை வெளியீட்டை நேரில் பார்க்க,   சீரியல் கொடுமையை அனுபவிக்கனுமா?: நெட்டிசன்கள் குமுறல்

ர்கார் இசை வெளியீடு நேரில் பார்க்க, டி.வி. சீரியல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமா என்று சமூகவலைதளங்களில் பலரும் ஆதங்கத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. வெளிநாடுகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்  சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீடு விழா குறித்து புதிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என சன் பிக்ஸர் சார்பில் ட்விட்டரில் பதியப்பட்டிருந்தது.  இதையடுத்து  விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று மாலை ஆறு மணிக்கு சர்கார் இசை வெளியீட்டு விழா குறித்து சன் பிக்சர்ஸ் அறிவிப்பை வெளியிட்டது.

அதில்,  “வரும் அக்டோபர் 2ம் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெறும். இதை இலவசமாக நேரில் கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு. வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை  மாலை 7 முதல் 9 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒலிபரப்பாகும் சீரியல்களை தொடர்ந்து பாருங்கள். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு விரைவாக அதிக கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இதில் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு  இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து செல்ல இலவச விமான டிக்கெட்டும், வழச்செலவுக்கு ரூ.2000 பணமும் அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

நெட்டிசன்கள் கிண்டல்

இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது.

“சர்கார் இசை வெளியீட்டு விழாவை இரண்டு மணி நேரம் நேரில் பார்க்க, தினமும் இரண்டு மணி நேரம் சீரியல்களைப் பார்த்து நரகத்தை அனுபவிக்க வேண்டுமா” என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “இப்படி உட்கார்ந்து சீரியல் பார்க்கிறியே.. உனக்கு ஏதும் புரியுதா” என்று விவேக் கேட்க, அதற்கு தனுஷ்,”ஒண்ணுமே புரியலை” என்று சொல்ல, விவேக், “என்னைக்காவது ஒருநாள் பார்த்தா அப்படித்தான் இருக்கும்” என்று சொல்வது போல மீம்ஸ் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.