மனைவியைத் தற்கொலைப் படை வீரர் எனப் பொய் புகார் அளித்த கணவன் கைது 

டில்லி

தன்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு செல்லும் மனைவியைத் தடுக்க அவர் மீது கணவர் பொய்ப் புகார் கூறி உள்ளார்.

 

கடந்த 8 ஆம் தேதி அன்று டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனது மனைவி ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் எனவும்  அவர் விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க உள்ளார் எனவும் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர் தனது மனைவி குறித்த எவ்வித விவரமும் தெரிவிக்கவில்லை.

இதையொட்டி சோதனை நிமித்தமாக அன்று செல்லவிருந்த பல வெளிநாடு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பலர் துயரம் அடைந்தனர். காவல்துறையினர் அந்த தொலைபேசி அழைப்பு அளித்தவரைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் டில்லியில் பவானா பகுதியில் வசிக்கும் நசிருதீன் என்னும் 29 வயது இளைஞர் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த நசிருதீன் ஒரு பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தவர் ஆவார். தனது நிறுவனத்தில் பணி புரியும் ரஃபியா என்னும் பெண்ணை அவர் மணமுடித்தார். அந்தப் பெண் வளைகுடா நாட்டில் சென்று பணி புரிய விரும்பி உள்ளார்.  அதை நசிருதீன் தடுத்துள்ளார். ஆயினும் ரஃபியா வெளிநாடு சென்றுள்ளார். அவர் பயணத்தைத் தடுக்க நசிருதீன் இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளார். நசிருதீன் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.