மதுரை,

ள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் அக்டோபர் 31ந்தேதிக்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக வின் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு அ.தி.மு.க பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்செந்துாரைச் சேர்ந்த ராம்குமார்  என்பவர், உடைந்த அதிமுகவில் எந்த அணிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அதற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்க வேண்டும் எனவும், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி உடைந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கையை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீதும்  முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து இரட்டை இலை வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,   இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இருதரப்பினரும் லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதா லும், இருதரப்பினரும் மாறி, மாறி காலஅவகாசம் கேட்பதாலும் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன்  முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.