சென்னை,

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இன்றைய பொதுக்குழுவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தடை கேட்டு டிடிவி தரப்பினரின் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கடும் பாதுகாப்புடன் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுகவை கைப்பற்ற சசிகலா மறைமுகமாகவும், தனது ஆதரவாளர்கள் மூலம் மரட்டியும் கட்சிக்குள் வந்ததால், அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையடுத்து, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அவரது  தலைமையில்  அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் அது மூன்றாக சிதறியது.

இந்நிலையில், ஆரம்பத்தில் உடைந்த  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு அணிகள் இணைந்தன.  சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் தலைமையில் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தாங்களே உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக கட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரும் பொருட்டும், சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து முழுமையாக விலக்கி, தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க. பெயரையும்,  இரட்டை இலையை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமாக அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு நடைபெறுகிறது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு டிடிவி ஆதரவாளர்கள் தவிர  மற்ற அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுக்குழு கூடுவதை தொடர்ந்து ஏற்கனவே பலர் சென்னை வந்துவிட்டதாகவும், இரு மன நிலையில் இருக்கும் சிலரையும் இரு தரப்பினரும் சந்தித்து மூளை சலவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில், காவல் துறை உயர் அதிகாரிகளை நேற்று காலை முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுக்குழு நடைபெறும் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  இணை கமி‌ஷனர்  தெரிவித்துள்ளார்.

அந்த பகுதி முழுவதும்  அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவின் பொதுக்குழு நடைபெற இருக்கும் மண்டபத்தில், அதிமுக உறுப்பினர்கள் அட்டை யுடன் பொதுக்குழு அழைப்பிதழ் உள்ள  உறுப்பினர்களை தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே  மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு முடிவை இந்தியாவே எதிர்நோக்கி உள்ளது.