சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில்  இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 25ந்தேதி  தொடங்கப்பட்டது.  சென்னை சென்ட்ரல்  முதல்  நேருபூங்கா வரையிலான சுரங்க பாதையையும், டிஎம்எஸ் முதல் சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளிலும்  மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரயில் போக்கு வரத்தைத் தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர்.

ஆனால் மெட்ரோ ரெயிலுக்கான பயணம் கட்டணம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக பயணிகள் மெட்ரோ ரெயில் பயணத்தை புறக்கணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.