சென்னை : இன்றும் நாளையும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
சென்னை
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதால் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையான செப்டம்பர் 13ஆம் தேதி நாடெங்கும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்துள்ளன. இவ்வாறு சுமார் 2500 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள் 5 அடி முதல் 10 அடி உயரம் கொண்டவை ஆகும்.
விநாயக சதுர்த்தி முடிவடைந்ததும் இச்சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செலப்பட்டு நீரில் கரைக்கப்படும். இதற்கு விசர்ஜனம் என பெயர் ஆகும். இந்த ஊர்வலம் இன்றும் நாளையும் நடக்க உள்ளன. ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு சுமார் 20000 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர், “இந்த ஊர்வலங்கள் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வல நேரங்கள் அனுமதித்த நேரத்துக்குள் முடிவடைய வேண்டும்” என நெறிமுறைகளை கூறி உள்ளனர். விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, காசி மேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.