சென்னை,
காவிரி பிரச்சினை தொடர்பான திமுக இன்று கூட்டியது, திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று பாரதியஜனதா காட்டமாக கூறி உள்ளது.
மு.க.ஸ்டாலின் கூட்டியது தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக இன்று கூட்டியது. இதில் பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜ, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி கலந்துகொள்ளவில்லை. காங்கிரசும், தமாக மட்டுமே கலந்துகொண்டன.
இன்று காலை தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை பா.ஜனதா மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  கடுமையாக விமானம் செய்துள்ளார்.
ponnar
அவர் கூறியதாவது:
இன்று நடந்தது சர்வ கட்சி கூட்டமா? தி.மு.க. கூட்டணி கட்சிகள் அல்லது அந்த கூட்டணி யில் சேர துடிப்பவர்களை தவிர யாரும் பங்கேற்கவில்லையே. இந்த கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.
காங்கிரசும், தி.மு.க.வும் 40 வருடமாக பொறுப்பில் இருந்து இருக்கிறது. காவிரி பிரச்சினையில் என்னென்ன பேசினீர்கள்? என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை பட்டவர்த்தனமாக தமிழக மக்களுக்கு தெரிவியுங்கள். அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிட கோரி இருக்கிறேன்.
பழையதை மறப்போம். இப்போதாவது எல்லா கட்சிகளும் ஒருங்கிணையலாமே என்கிறார்கள். முதலில் இதுவரை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அதன் பிறகு யோசிப்போம்.
இத்தனை ஆண்டு காலம் நடந்த சீரழிவுக்கு யார் காரணமோ அந்த காங்கிரசை அருகில் வைத்திருக்கிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்றார்கள். இப்போது ஒன்றாக கூடி இருக்கிறார்கள்.
இதுவரை நடந்த தவறுகளுக்கும், துரோகங்களுக்கும் காங்கிரஸ் துணையாக இருந்தது. இப்போதும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தவர். 12 மத்திய மந்திரிகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் இந்த பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை.
மீண்டும் இப்போது அவர்களை நம்பி போலியான நம்பிக்கையை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டுமா? அதற்கு எல்லா கட்சிகளும் துணை போக வேண்டுமா?
அரசாங்கம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தால் எல்லோரும் கலந்து இருப்பார்கள். தங்கள் கருத்தை பதிவு செய்து இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.