திமுக தலைவர் பதவி: 50ஆண்டுகால அரசியலில் ஸ்டாலின் ஏறி வந்த படிக்கட்டுக்கள்

சென்னை:

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற  திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிக்கு வர  மு.க.ஸ்டாலின் தனது 50 ஆண்டுகால அரசியலில் பல்வேறு பதவிகளை ஏற்று.. ஒவ்வொரு படியாக முன்னேறி இன்று தலைவர் பதவியை அடைந்துள்ளார்.

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு   நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

திமுக கட்சி தொடங்கியதில் இருந்து கட்சி தலைவராக மு.கருணாநிதி இருந்து வந்த நிலையில், தற்போது அவரது இடத்தை அவரது மகனான மு.க.ஸ்டாலின்  நிரப்பி உள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் தலைமை இப்போதுதான் மாறி உள்ளது. மு.க.ஸ்டாலின் திமுகவின் 2வது தலைவராக இன்று முடிசூட்டப்பட்டு உள்ளார்.

அண்ணா வழியில் வந்த கருணாநிதியின் தாரக மந்திரமான, அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு படியாக ஏறி வந்த மு.க.ஸ்டாலின்  இன்று திமுக தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்த பதவியை அவர் சும்மா அடையவில்லை.  1968ம் ஆண்டு முதல் திமுகவில் பல்வேறு பணிகளை ஏற்று.. ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல ஏறி….  சுமார் 50 ஆண்டுகாலம் தனது தந்தையார் கருணாநிதியுடன் அரசியலில் கைகோர்த்து பயணம் செய்து…  இன்று திமுகவின் தலைமை பொறுப்புக்கு முன்னேறி உள்ளார்.

ஸ்டாலின்  ஏற்கனவே வகித்த பதவிகள் விவரம் இதோ…

1968 இளைஞர்  மன்றத்தில் பதவி.

1971 திமுக மாவட்டப் பிரதிநிதி

1973 பொதுக்குழு உறுப்பினர்

1976 மிசா கைது ஓராண்டுச்சிறை

1982 இளைஞரணி அமைப்பு செயலர்

1989 சட்டமன்ற உறுப்பினர்

1996 சென்னை மாநகர மேயர்

2003 திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்

2006 திமுக ஆட்சியில் அமைச்சர்

2008 திமுக பொருளாளர்

2009 திமுக ஆட்சியின்போது துணைமுதல்வர்

2016 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்

2017 திமுக செயல் தலைவர்

2018 திமுக தலைவர் – இன்று திமுக தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

ஸ்டாலினின் 50 ஆண்டுகால அயராத உழைப்பு இன்று அவரை கட்சி தலைவராக அமர வைத்து உள்ளது.