சென்னை: மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், த.மா.காவின் துணைத்தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன்  உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  ஞானதேசிகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 15ந்தேதி) உயிரிழந்தார்.

ஞானதேசிகன்  2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். வழக்கறிஞரான, இவரது  வெளிப்படை பேச்சு, அறிவாற் றல் காரணமாக அரசியல் கட்சியினரிடையே பிரபலமானவர். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  காங்கிரஸில் இருந்து விலகி ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இந் நிலையில் கடந்த நவம்பர் (2020) மாதம் உடல்நலப் பாதிப்பு காரணமாக, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை  பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

முன்னதாக ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், தெலுங்கனா ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமாகா தலைவர் ஜிகே வாசன் நேரில் சென்று ஞானதேசிகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பல அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஞானதேசிகன் இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.