துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு  மும்பை வந்தது. அவரது இறுதி சடங்கு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்து அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

தற்போது ஸ்ரீதேவியின் உடல்  மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள செலிபெரஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படுகிறது.

அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு   ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தாரின் முறைப்படி தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

மும்பை விலே பார்லே (மேற்கு) பகுதியில் உள்ள விலே பார்லே சேவா சமாஜ் இந்து மயான பூமியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று ஸ்ரீதேவியின் மகள்கள் மற்றும் போனி கபூர் மற்றும் கபூர் குடும்பத்தினர் மற்றும் அய்யப்பன் குடும்பத்தினர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நட்சத்திர ஹோட்டலில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் கணவர் போனி கபூர், அவரது மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரும் உடன் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடலை பெற்றுக் கொண்டனர். இன்று அரவது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. பின்னர் அவர் அருந்தியிருந்த மது காரணமாக  குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது உடல் இந்தியா எடுத்து வருவதில் சிக்கல் உருவானது.   ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, துபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் மற்றும் அவரது  உறவினர்களிடமும், துபாய் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்றும் விசாரணை தொடர்ந்தது.

அதைத்தொடர்ந்து  ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதன்பின், ஸ்ரீதேவியின் உடலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரிடம் துபை அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அவரது உடல், ‘எம்பாமிங்’ எனப்படும் பதப்படுத்துதல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

‘எம்பாமிங்’ முடிந்ததும் துபாய் விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு மும்பைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது.

மறைந்த ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியா முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் திரையுலகை சேர்ந்தவர்கள் மும்பையில் குவிந்து வருகின்றனர்.