டில்லி

இன்று காலை இந்தியாவின் மசாலா மன்னர் என அழைக்கப்பட்ட மகாஷே தாரம்பால் குலாட்டி காலமானார்.

கடந்த 1923 ஆம் ஆண்டில் பிரபல மசாலா தயாரிப்பாளரான எம்.டி.ஹெச் நிறுவனத்தின் உரிமையாளரான மகாஷே தாரம்பால் குலாட்டி  பிரிக்கப்படாத இந்தியாவின் சியால்கோட்டில் பிறந்தவர் ஆவார். இவர் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைக் கைவிட்டு, தனது தந்தையுடன் இணைந்து கண்ணாடி, சோப்புகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து மசாலா தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட தாரம்பல் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது, டில்லிக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு அவர் டில்லி ரயில் நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் மக்களை அழைத்துச் செல்லும் வேலையைச் செய்துவந்தார்.

சில நாட்களுக்கு  பிறகு தனது குதிரை வண்டியை விற்று அவர் மீண்டும் மசாலா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார்.  பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மசாலா நிறுவனத்தின் உரிமையாளராக வளர்ச்சியடைந்தார்.  இவர் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களே அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றும் ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் ஆவார்.

தற்போது 97 வயதான மகாஷே தாரம்பால் குலாட்டி, உடல் நலக்கோளாறு காரணமாகக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.  இந்நிலையில், இன்று காலை இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனத் தகவல்கள் வந்துள்ளன. இவருடைய மறைவுக்குப் பல்வேறு தொழிலதிபர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.