இன்று 30வது நாள்: கோரிக்கைகளை உடலில் எழுதி தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி,

லைநகர்  ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 30 வது நாளை எட்டியுள்ளது.

தமிழகத்தில்  வறட்சி காரணமாக  400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,  தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல வகையான போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மோடியும், மத்திய அரசும் இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவான எந்தவித தகவல்களையும் சொல்லாத நிலையில் இன்று 30 வது நாளாக கோரிக்கைகளை உடலில் எழுதி போராடி வருகின்றனர்.

ஏற்கனவே மண்டைஓடு, பிச்சை எடுத்தல், தூக்குகயிறு, ஒருபக்க மீசை, அரை மொட்டை, நிர்வாண போராட்டம், மண்சோறு சாப்பிடும் போராட்டம்  போன்ற ஏராளமான நூதன போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று கோரிக்கைகளை உடலில் மையால் எழுதி போராடி வருகின்றனர்.

 

இதற்கிடையில், நேற்று பாராளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமாரி கங்வார்,  விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது என்ற உத்தேசம் ஏதும் அரசிடம் இல்லை என்று அறிவித்து விவசாயிகளின் வயிற்றில் மேலும் அடித்துள்ளார்.