இனி கிடைப்பானா இன்னொரு பாலையா?

நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

இனி கிடைப்பானா இன்னொரு பாலையா?

நீண்ட நெடிய தமிழ்சினிமா வரலாற்றில் ஆர்ப்பாட் டமே இல்லாத வில்லத்தனத்திற்கு வித்திட்ட மிகப்பெரிய கலைஞன் டிஎஸ் பாலையா..

அவரை படங்களில் தரிசிக்க தரிசிக்க வியப்புதான் மிஞ்சும். ஒரே வரியில் சொன்னால் காலத்தை மிஞ்சிய இணையில்லா கலைஞன் அவன்..

அடுத்து கெடுக்கும் படலம்..
பணம் பாழாக்கும் படலம்..
மானம் பறிக்கும் படலம்..
கண் குத்தும் படலம்..

இப்படி நான்கு வகை பழிவாங்கல் பற்றி நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியிடம் விவரிப்பார் டிஎஸ்பாலையா.. அறிஞர் அண்ணாவின் வசனத்தை பாலையா படிப்படியா சொல்லும் விதம், வேலைக்காரி (1949) படத்தை பார்ததவர்களால் மட்டுமே உணரமுடியும்..

இன்று வரை எல்லோராலும் பேசப்படுகிற புகழ்பெற்ற வசனமான கத்தியை தீட்டாதே..உன் புத்தியை தீட்டு என்பதை வேலைக்காரி படத்தில் பேசியவரும் பாலையாதான்..
உடனிருந்து கெடுக்கும் மனிதனின் ஈனச்செயல், இப்படித்தான் இருக்கும் என்று, பல படங்களில் பாலையா அற்புதமான நடிப்பால் பிரதிபலிப்பார்.

1952ல் எம்ஜிஆரின் அந்தமான் கைதி படம்.. கதையில், சொந்த தங்கையின் மகளை மணந்து பெண்டாள துடிப்பார் காமுகனான கே.சாரங்பாணி. தாய் மாமனின் முறையற்ற செயலை தட்டிக்கேட்டு போராடுவார் அண்ணனான எம்ஜிஆர். இத்தனைக்கும் நடுவில் நின்று வில்லனுக்கு தூபம் போட்டு மேலும் மேலும் ஏற்றிவிட்டு சகல சாசகங்களையும் செய்வார் பாலையா.. எதைப்பற்றியும் கவலைப்படாத பாத்திரம் அது..

டிஎஸ் பாலையா… இன்றைய மசாலா சினிமாக்காரர்களால் அரிவாள் பூமி என வர்ணிக்கப்படும் நெல்லை மண்ணில் பூத்தவர்.

என்எஸ்கே, எம்கே ராதா, எம்ஜிஆருக்கு மட்டுமின்றி இவருக்கும் சதிலீலாவதிதான் (1936) அறிமுக படம். வில்லனில் ஆரம்பித்து குணச்சித்திரத்தில் வெளுத்து வாங்கி தலைமுறை தலைமுறையாய் கவர்பவர்..

பர்மா ராணியில் உளவாளி, உதார் தளபதி யாய் மதுரைவீரன், கொடூர வில்லனாய் புதுமைப்பித்தன் என பாலையாவின் பவர் ஃபுல் ஆக்டிங் பக்கங்களை புரட்டினால் வியந்துகொண்ட போகவேண்டியதுதான்.

பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பணம் படைத்தவன் போன்ற படங்களில் பாலையாவின் நடிப்பாற்றலை சொல்ல தனி புத்தகம்தான் தேவை.

காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, பாமாவிஜயம் போன்ற படங்களை பாலையா இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது.

அசோகரு நம்ப மகருங்களா என அந்தர்பல்டி அடித்து கேட்கும் காதலிக்க நேரமில்லை கதாநாயக னான எஸ்டேட் அதிபர் விஸ்வநாதன், என் பாட்டுக்கு இந்த பாண்டியநாடே அடிமை என எகிறும் திருவிளையாடல் ஹேமநாத பாகவதர், வண்டில இன்னைக்கு ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே என கலாய்க்கும் ரயில் பயணத்தில் தெறிக்கவிடும் தில்லானா மோகனாம்பாள் தவில் வித்வான்.. யாரால் மறக்கமுடியும். இன்றைய தலைமுறைகூட அசந்துபோகிறார்கள் இந்த பாத்திரங்களை பார்த்து

தில்லானாவில் நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனை களோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக இவரின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்துபோனதெல்லாம் தனி வரலாறு

சிவாஜியின் தூக்குதூக்கி படத்தில் கள்ளக்காதலனாய் வடநாட்டு சேட்டு பாத்திரத்தில் வந்து நம்பிள் நிம்பிள் என கலப்பு பாஷையில் பாலையா பிய்த்து உதறியவிதம், அதேபோல் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் மெட்ராஜ் பாஷையில் பாலையா கலக்கிய விதம்.. லேசில் விவரிக்க முடியாதவை…

பணம் படைத்தவனில் கலப்புமணம் செய்ததால் மகன் எம்ஜிஆரை வீட்டை விட்டு விரட்டிவிட்டு பேரன் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும். பிஞ்சுவை பார்க்கத்துடிக் கும் அந்த கட்டங்கள்.. நிஜ வாழ்வில் அப்படி ஒரு கட்டத்தில் தள்ளப்பப்பட்ட, அனைவரையும் கண் கலங்க வைத்த மாஸ்டர் பீஸ் காட்சி அது

1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என பல புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன்.. உலக சினிமாக்களை கரைத்து குடித்தவர்.

அவரிடம் ஒருமுறை, நீங்கள் பெரிய அளவில் பார்த்து வியக்கும் நடிகர் யார் என கேட்டபோது சொன்னார், அவர் வேறுயாருமல்ல,டிஎஸ் பாலையாவைத்தான்

மனுசனாய்யா அவன் என்ன ரோல் கொடுத்தாலும் அசத்துற அவ்ளோ டேலன்ட்டான ஆளு….என்று விளக்கமும் கொடுத்தார் டங்கன்.

58 வயதில் இதே நாளில்தான் 1972ல் டிஎஸ் பாலையா என்ற கலைஞன், காலத்தோடு கரைந்தான்…

You may have missed