சித்திரை மாதம் பௌர்ணமி திதியை சித்ரா பௌர்ணமி என சைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.   சிவ பெருமான் ஒரு தங்கப் பலகையில் ஒரு சித்திரத்தை வரைய அதைக் கண்ட பார்வதி அந்த சித்திரத்துக்கு உயிரூட்ட சிவனை வேண்டினாள்.   சிவனும் அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவக் கணக்குகளையும், புண்ணியக் கணக்குகளையும் எழுதி தம்மிடம் அளிக்க உத்தரவிட்டார்.

அந்த சித்திர மனிதன் சித்திர குப்தன் என அழைக்கபடலானார்.   அவருக்கு இன்று புஜை நடத்துவது விசேஷமாகும்.    ஒரு சிலர் இந்த நாளை சித்திர குப்தனின் திருமண நாள் எனவும் அழைக்கின்றனர்.

மகாபாரதப் போரில் சர்வ லட்சணம் பொருந்திய அரவானை பலி கொடுத்த நாள் இது என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.    அரவானின் ஆசைக்கிணங்க ஸ்ரீ கிருஷ்ணர் பெண் உருவம் கொண்டு அவரை திருமணம் செய்து அடுத்த நாள் அரவான் பலியிடப்பட்டதும் விதவைக் கோலம் பூண்டுள்ளார்.   அதனால் திருநங்கைகள் சித்ரா பௌர்ணமி அன்று கூத்தாண்டவர் கோவிலில் அரவான் விழா எடுத்து தாலி கட்டிக் கொண்டு அடுத்த நாள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

சித்ர குப்தன் பூஜை முறையைப் பார்ப்போம்.   வீட்டின் பூஜை அறையில் சித்ரகுப்தன் படியளப்பு என எழுதி விநாயகர் படத்தை வைக்க வேண்டும்.   சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்ய வேண்டும்.  அத்துடன் காய்கறிகள், பருப்பு ஆகியவறையும் படைத்து வணங்க வேண்டும்.   ஒரு சில கிராமங்கலில் சித்ரகுப்தன் புராணம் படிப்பதும் வழக்கம் ஆகும்.