ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் –

என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப  ‘அம்மா’  இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல் சிலிர்ப்பதை உணராதவர் உலகில் ஒருவரும் இலர்.

அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் 1908ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை. என்ற முதுமொழிக்கேற்ப  நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழி காட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னை களுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமை இவரையே சாரும்.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடிணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதன் காரணமாக உருவானதே அன்னயைர் தினம்.

ஆனால் அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாட்டினையே தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் பெருமைபடுத்தி உள்ளனர். அன்னையின் சிறப்பைக் கூற, அவளைக் கொண்டாட ஒரு நாள் போதாது.

ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஒரு உயிர் அம்மா மட்டுமே.

ஒரு பெண் கருவைச் சுமக்க ஆரம்பித்தவுடன் உடலாலும் மனதாலும் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்திக்க ஆரம்பிக்கிறாள். தாய்மை என்றும் ஒரு வரமே. பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது  மறுஜென்மம் எடுக்கிறாள்.

ஒன்பது மாதங்கள் கருவைச் சுமந்து பத்தாவது மாதம் குழந்தைபேறின் போது மறுஜென்மம் எடுக்கிறாள்.  ஏனெனில் பிரசவ வலி என்பது  உலகில் உள்ள அத்தனை வலிகளிலும் அதிகமானது.  பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள். குழந்தை பிறந்தபின் அக்குழந்தைக்காக பசி, தூக்கம் மறந்து அதனைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள். எத்தனையோ அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்திலும் குழந்தை வளர்ப்பதற்காக தன் வேலை, படிப்பை மறந்து குழந்தையே கதியாக இருக்கும் எண்ணற்ற இளந்தாய்மார்கள் இன்றும் இருக்கிறார்கள்.

குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதும், குழந்தை பிறந்தபின்பும் குழந்தைக்காக சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளும் தாய் குழந்தை வளர்ந்தபின் தங்கள் உடல்நலம், உணவில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் இளவயதிலேயே மூட்டுவலி, உடல் பருமன் மற்றும் பல நோய்களால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனைத் தவிர்க்க அன்னையர்களும் இன்றைய காலகட்டத்தில் தங்கள் உடல்நலத்தில் சற்று சுயநலத்துடனும், அக்கறையுடனும் இருத்தல் நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் காலம்காலமாக தாயைத் தியாகத்தின் மறுஉருவம் என்று சொல்லி அவள் தன்னைப்பற்றி நினைப்பதையே தவறு என்று உருவாக்கி விட்டோம். அவ்வாறு இல்லாமல் தற்காத்து தற்கொண்டானைப்பேணி என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கிணங்க தன் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக் கொள்வதுடன் தன் குழந்தை, குடும்ப உறுப்பினர்கள் நலத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

அதனைப் போன்று குடும்ப உறுப்பினர்களும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிகடந்து விடாமல் இன்றிலிருந்தாவது தாயிடம் மனம் விட்டு பேசுவதுடன் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் கருத்தையும் கேட்டு அவளையும் சகமனுஷியாக மதித்து அவள்தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே அவளுக்கு நாம் தரும் சிறந்த அன்னையர் தின பரிசாகும்.

நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள் எனச் சார்லி பென்னடோ கூறுவார். அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது.

இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது. எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கட்டுரை: டாக்டர் மாலதி M.D.(S)