டில்லி

க்களவை தேர்தலின் ஆறம் கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் பல தொகுதிகளில் குறிப்பாக மேற்கு வங்க மாநில தொகுதிகளில் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக சென்ற மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இன்று ஆறாம் கட்ட வாக்குப் படிவு மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இன்று உத்தரப் பிரதேசம் (14), ஹரியாணா (10), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), மேற்கு வங்கம் (8), தில்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 979 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், கிருஷண் பால் குர்ஜார், ராவ் இந்தர்ஜித் சிங், ஹர்ஷவர்தன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது மகன் தேவேந்தர் சிங் ஹூடா, பாஜக மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித் மற்றும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவை ஒட்டி இந்த 59 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்க மாநிலம் ஜங்கல் மகால் தொகுதியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் இங்கு பாதுகாப்பு மிகவும் பலமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்ணி வெடி தாக்குதல் இருக்கலாம் என்பதால் மத்திய பாதுகாப்பு படையினர் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.