இன்று 21வது நாள்: தலைநகரில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டெல்லி,

லைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இன்று 21வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இன்றைய போராட்டத்தின்போது தமிழக விவசாயிகள் பாதி மீசையை வழித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, பஞ்சாப் மாநில விவசாய சங்கத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகத்தில்  வறட்சி காரணமாக  250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமை யில் கடந்த 21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாண நிலையில் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தலையில் பாதி முடியை மழித்து போராட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து இன்று பாதி மீசையை எடுத்து போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு எந்தவித உறுதிமொழியும் அளிக்காததால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.  அவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

பல மாவட்டங்களில் விவசாயிகள் மத்திய அரசு அலுவலகம் முன்பும், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் சூடுபிடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.