Random image

இன்று 4வது நாள்: தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை:

திய முரண்பாடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அமைப்புகள் தெரிவித்து உள்ளது.

தங்களது கோரிக்கையை ஏற்று அரசாணையை பெற்று கொண்டு தான் சொந்த ஊர்களுக்கு திரும்புவோம் என்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து  உள்ளனர்.

ஊதிய முரண்பாடுகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி, சென்னையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 4வது நாளாக போராடி வருகின்றனர். இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் டிபிஐ வளாகத்தில் பல ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டும், இரவு நேரங்களில் திறந்தவெளியில் உறங்கியும் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர், ஆசிரியைகளில் இதுவரை 72 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், மற்றவர்களும் சோர்வாகவே காணப்படுகின்றனர்.

தங்களது கோரிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி அழைத்து பேசி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை நேற்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை  கைவிட மாட்டோம் என்று  இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்  கூறி உள்ளார்.

தண்ணீர் மற்றும் உணவு இன்றி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் போராட்டத்தை தொடர்வதில் ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், தாங்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியத்தை மட்டுமே கேட்பதாகவும் மிகையாக கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள், இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு  மிகுந்த சிரமப்படுவதாக வும் கூறி உள்ளனர்.  தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக டிபிஐ வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 31.5.2009க்கு முன்பு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதற்கு அடுத்த நாள் 1.6.2009ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஊதியத்தில் வேறுபாடு ரூ.3170 வருகிறது. இரண்டாவதாக பணி நியமனம் பெற்ற மேற்கண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.