இன்று குரு பெயர்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலம் உள்பட நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இதுவரை துலாம் ராசியில்  இருந்து வந்த குருபகவான் தற்போது அங்கிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார்.

 

குருபெயர்ச்சியை ஒட்டி சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் குரு ஸ்தலமான  திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள  அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த  வியாழக்கிழமை தொடங்கி அக்.1- ஆம் தேதி வரை நடைபெற்றது. அதையடுத்து இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை, குருபெயர்ச்சிக்கு பின்னர் அக்.8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி காரணமாக  மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறுகிறது.

தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் கோவில்களில் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

குருபெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வக்கிரங்களில் சுபக் கிரகமான குருபகவான் புத்திர காரகனாகவும் தன காரகனாகவும் விளங்குகிறார். வாழ்வில் வளமும் நலமும் பெற குருபகவானின் அருள்பார்வை அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஒருவருடம் ஆகிறது. ஒருவருடைய ராசியில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சி பெற்றாலும் அந்த ஜாதகத்திற்கு உரியவருக்கு தர்ம சிந்தினைகள் ஏற்படும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், துலா ராசியில் இருக்கும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இரவு 10.05 மணி முதல் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.திருக்கணித பஞ்சாங்கப்படி இம்மாதம் 11 ம்தேதி குருபெயர்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகாரப் பூஜைகளும் நடைபெறுகின்றன.