a
சென்னை: நாளை மறுநாள் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடப்பதை ஒட்டி இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கு பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 9-ஆம் தேதி சென்னையில் பிரசாரத்தைத் தொடங்கினார். தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  வெளி மாவட்ட பிரசாரத்தை திருநெல்வேலியில் கடந்த வியாழக்கிழமை நிறைவு செய்த ஜெயலலிதா,  இன்று (சனிக்கிழமை)  சென்னை புறநகர்ப் பகுதிகளில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை  நிறைவு செய்கிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதி, கடந்த சில நாள்களாக தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், உள்ளிட்ட இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்த கருணாநிதி  திருச்சி, மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.
இன்று (சனிக்கிழமை) பிற்பகல் சென்னையில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். கடந்த சில நாள்களாக சென்னை பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். . தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த பல நாள்களாக தீவிர பிரசாரம் செய்து வந்த  தேமுதிக தலைவர் விஜயகாந்த். தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் கடந்த சில நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று உளுந்தூர்பேட்டை தொகுதியில் பொதுக் கூட்டத்துடத்தில் பேசுவதுடன் தனது  பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவருமான பிரேமலதா சென்னை தியாகராயநகரில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று  காலையில் தூத்துக்குடியிலும், மாலையில் பாளையங்கோட்டையிலும் பிரச்சாரம் செய்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் தான் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று ஒசூரில்  பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மயிலாப்பூரில்  இன்று பிரச்சாரம் செய்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணனும் அரூரிலும்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்திலும், கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி தான் போட்டியிடும் பென்னாகரத்திலும் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்கள். .
பாரதிய ஜனதா கட்சிக்காக மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர், வெங்கய்யா நாயுடு ஆகியோர் இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.  பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்,  இன்றுடன் நிறைவடைகிறது.