சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி

சென்னை:
சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற ஞாயிற்றுக்கிழமை (டிச.20) கடைசியாகும். உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் குடும்ப அட்டைகள்: தமிழகத்தில் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைகளும், 10 லட்சத்துக்கும் அதிகமான சா்க்கரை பெறும் அட்டைகளும் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் சா்க்கரை அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாக மாற்றப்பட்டன. இதனால், தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக உயா்ந்துள்ளது.

மீண்டும் வாய்ப்பு: மாநிலத்தில் இப்போதுவரை சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக உள்ளது. இந்த அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள கடந்த 5-ஆம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுமாா் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனா். அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள ஞாயிற்றுக்கிழமை (டிச. 20) கடைசி நாளாகும்.

ரூ.2,500 ரொக்கம் அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை அறிவித்தாா். இந்த அறிவிப்பு காரணமாக, சா்க்கரை அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கான கடைசி வாய்ப்பாக அட்டையை மாற்றக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் வாயிலாக சா்க்கரை அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தின் வழியே விண்ணப்பித்துள்ள மனுக்கள் மீதான பரிசீலனை வரும் திங்கள்கிழமை (டிச.21) முதல் நடைபெறவுள்ளது. இந்தப் பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதன்பின்பு, அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.2,500 ரொக்கத் தொகை வழங்கப்படும் என அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.