இன்று வள்ளலார் பிறந்த நாள்

நமது பாரதே தேசம் பல அருளாளர்கள் பிறந்த தேசமாக திகழ்கிறது.  அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் பல மகான்கள் அவதரித்துள்ளனர்.  அப்படி அவதரித்த மகான்களில் ஒருவர் வள்ளலார் ஆவார்

ராமையா – சின்னம்மை தம்பதியருக்கு 1823ஆம் வருடம் அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் என்னும் ஊரில் வள்ளலார் பிறந்தார்.  இவருடன் பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வர்.  இவர் தனது ஆறாம் மாதத்திலேயே தந்தை இழந்தார்.  இவர் அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு ஆற்றுபவர்.  அவர்தான் இவரை வளர்த்தார்.   வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம்.

சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டம் உடையவராக இருந்த வள்ளலார் பள்ளிப் படிப்பில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.  தனது சிறுவயதிலேயே திருத்தணி முருகன் தரிசனம் கிடைக்கப் பெற்றவர்.   ஒருமுறை இவர் அண்ணனுக்கு பதில் இவர் சமய சொற்பொழிவாற்றியதில் இருந்து இவர் புகழ் பரவத் தொடங்கியது.

வள்ளலாருக்கு 1850ஆம் வருடம் திருமணம் நடந்தது.   இவர் மனைவி பெயர் தனக்கோடி அம்மையார்.  இவர் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார். இவர் பல அற்புதங்களை செய்துள்ளார். அவற்றில் ஒன்றாக கருங்குழி என்னும் ஊரில் இவர் தங்கியிருந்த வீட்டில் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரால் தீபங்களை எரிய வைத்தார்.

வடலூரில் 23/5/1867 அன்று தருமசாலையை தொடங்கினார்.  அதற்காக 8 காணி நிலம் வடலூர் மக்களால் அளிக்கப்பட்டது.   அப்போதிலிருந்து இன்றுவரை இந்த தருமசாலையில் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.  ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” எனப் பாடியவர் வள்ளலார்.

இவர் எல்லாம் மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே எனக் குறிக்கும் வண்ணம் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என ஒரு மார்க்கத்தை தொடங்கினார்.  சாதி வித்தியாசங்களை எதிர்த்ததால் பல சாதி இந்துக்கள் இவரை எதிர்த்தனர்.   ஆனால் அதை வள்ளலார் பொருட்படுத்தவில்லை.

வள்ளாரின் கொள்கைகள்

1.   கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

2.   புலால் உணவு உண்ணக்கூடாது.

3.   எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

4.   சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

5.   இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதிவைத்தல் வேண்டும்.

6.   எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

7.   பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

8.   சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

9.   எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

10. மத வெறி கூடாது .

வள்ளலார் 1874 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று தைப்பூச திருநாளில் வடலூரில் ஜோதியுடன் ஐக்கியமானார்.   இன்றும் இவர்வழி நடப்போர் பெருமளவில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Today is Vallalar's birth day
-=-