இன்று மகா தீபம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை:

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை மலையில் மகாதீபம் ஏற்றப்படும் நிலையில், அதிகாலை மூன்றரை மணி அளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 10வது நாள் திருவிழாவின்போது திருவண்ணாமலையில் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இதன் முன்னேற்பாடாக இன்று  அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து,  அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம் மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இதையடுத்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

அடி, முடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும் பிரம்மாவும் உணர் கிறார்கள். அடிமுடியற்ற ஜோதி  சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை. அதை கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று  திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவாலம் மற்றும் முருகன் கோவில்களிலும் தீபஜோதி பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Today Maha Deepam: Tiruvannamalai Annamalaiyar temple is lighted Bharani Deepam, இன்று மகா தீபம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
-=-