ன்று மார்கழி மாதம் குதூகலமாக பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த மாதத்தை பக்தி சிரத்தையோடு கொண்டாடி வரகின்றனர்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இவ்வளவு சிறப்பு மிகுந்த மார்கழி மாதத்தின் சிறப்பு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி மாதமே தேவர்களின் அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே  இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.

இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மார்கழியை நாமும் கொண்டாடுவோம்.