இன்று: மே 18
இந்தியாவின் முதல் அணுக்கரு வெடிப்பு சோதனை
இந்தியா தனது முதலாவது அணுக்கரு வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது. இதற்கு சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டது. (Smiling Buddha) இதில் அமைதிப் பணிக்கான நோக்கமே உள்ளது என்பதை உலகிற்கு கூற அப்பெயர் இடப்பட்டது. இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனை் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி) வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
– இலங்கை அரசுப்படைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலைப புலிகளின் படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் பல ஆயிரம் அப்பாவி தமிழ்மக்கள் – ஏறக்குறைய 40000 ஆயிரம் பேர் – சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட நாள். 2009 ஆம் ஆண்டில் இதே நாள் இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் இவ்வினப்படுகொலைகள் நிகழ்ந்தன. இதனை ஒரு போர்க் குற்றமாகக் கருதி அது குறித்த சர்வதேச விசாரணை நடத்தப் படவேண்டும் என்று ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றிய தீர்மானம் நடைமுறையில் இருப்பினும் அப்படிப்பட்ட விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.
பன்னாட்டு அருங்காட்சியக நாள்
இது ஆண்டுதோறும் மே 18 பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது.
- டி.பி. ஜெயராமன்