இன்று நவராத்திரி ஆரம்பம் – சிறப்புக்கள்

இன்று நவராத்திரி ஆரம்பம் – சிறப்புக்கள்

நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளைக் குறிக்கும். உலகத்தையும் உலக மக்களையும் காக்கும் பொருட்டு அம்பாள் தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நாட்கள் நவராத்திரி எனப்படும்.

அம்பாளை வழிபடுவதால் அனைத்து தீங்குகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபாடு செய்யப்படுகிறது.

உலக நன்மைக்காக ஐந்து முறை அம்பாள் அவதரித்துள்ளதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. முதலாவதாக மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் போது விஷ்ணுவின் நாபியிலிருந்த பிரம்மாவிற்குப் பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும், சிருஷ்டிக்கும் வல்லமையையும் கொடுத்தாள். இரண்டாவதாக மகாவிஷ்ணுவின் மூலமாக மோகினியாக அவதாரம் எடுத்தாள்

மூன்றாவதாக தட்சனின் புதல்வியாகத் தாட்சாயணி என்னும் பெயருடன் அவதரித்தாள்.. நான்காவதாகச் சிவபெருமானைத் திருமணம் புரிவதற்காகப் பார்வதி தேவியாக அவதாரம் எடுத்தாள். ஐந்தாவதாக பண்டாசுரனை அழிப்பதற்காக லலிதாம்பாள் என்னும் திருப்பெயருடன் ஸ்ரீ சக்கரம் என்ற ரதத்தில் அவதாரம் எடுத்தாள்

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு

மகாநவமி எனப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவியின் அருள் வேண்டி தங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றுடன் புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்களையும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் துவங்கினால் அவ்வருடம் முழுவதும் செய் தொழில் வளம் பெற்றுச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.