இன்று: நவ. 28: கடவுளுக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய ஜோதிராவ் பூலே!

பெண்களுக்கு என்று பிரத்யோக பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய இந்திய சமூக புரட்சியாளர்   ஜோதிராவ் பூலே நினைவு தினம் இன்று!!

தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்த பின் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களால் வளர்க்கப்பட்டார்.
இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் “கீழ்சாதி ஆள்” என சொல்லி, அவரை அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார். மேற்குலகின் நூல்களை படித்தார். வேதங்களை படித்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சார்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தார்.

உடல் உழைப்பை கொட்டித்தரும் மக்களை சூத்திரர் என பாகுபடுத்தி சோம்பிக் கிடக்கிற வேலையை தான் பிராமணர்கள் செய்கிறார்கள் என்றார். 1857 விடுதலைப் போரை உயர் சாதிகளின் செயலாகவே அவர் பார்த்தார்.

(புராண) பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. இயல்பாக பகடி செய்து செல்லும் அந்த கடிதம் இது தான்…

பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்
அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,
பிராமணர்களின் மூலமாக உலகுக்கு சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைக்க செய்ய வேண்டும்.

என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.

அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பிராமண பக்தர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு,
தங்களைப் பற்றிய பிரசாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

 

கல்வி அறிவை தராமல் மக்களை ஒடுக்கும் வேலையை செய்த இந்து மதத்தின் காவலர்களை பகடி செய்தார். ‘சத்திய சோதக் சமாஜ்’ எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார்.

ஒரு மதத்தை விட்டு வெளியேறி அதை விமர்சிப்பதைவிட அதை உள்ளிருந்தே அதன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார்.

தன் மனைவி சாவித்திரிபாய் புலே உடன் இணைந்து தாழ்த்தப்பட்ட, ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள்; போகிற பொழுது கல்லெறிந்தார்கள். என்றாலும் தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார்.

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது. 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ் புலே.
சாவித்திரி பாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண் ஆசிரியராக ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர், ஜோதிபாயிடம் புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ! பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள்!”என்றார்.

பூலே – சாவித்திரிபாய்

அவ்வாறே செய்தார். தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர்.

பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார்.
அவரின் பார்வை இன்றைக்கும் அவசியமாக இருப்பதை இவ்வரிகளே காட்டும், “தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக – பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்” அவரை நினைவுகூர்வோம்!

(பூ.கொ.சரவணன்  அவர்களின் முகநூல் பதிவு)