இன்று பங்குனி உத்திரம் 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.!

பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது வழக்கம்.

அதுபோல பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது  மிக முக்கியமானதாகும்.

பொதுவாக குலதெய்வமாக அவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள காவல் தெய்வங்களே வணங்கப்படுகின்றன. குறிப்பாக  சாஸ்தா என்றும் அய்யனார் என்றும் அழைக்கப்படுவதுண்டு

இந்த சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக நடைபெறும். நமது  மூதாதையர் காலங்களில் இருந்தே தொன்றுதொட்டு இந்த சாஸ்தா வழிபாடு நடைபெற்று வருகிறது.

நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை சாஸ்தாவுக்கு உண்டு.  ஒவ்வொருவரும், தங்கள் குல தெய்வமான சாஸ்தாவை தேடிக்கண்டுபிடித்து வழிபடுவது அவசியம்.

ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு தான் முக்கியம்.  குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை.

குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக்  100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம்தான் ஒவ்வொருவரையும்,  அவரது குலத்தையே பாதுகாக்கும். . ஒருவரது குல தெய்வத்தை வைத்து, அவரது பாரம்பரிய சிறப்பையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தற்போது பணி நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள், வருடத்துக்கு ஒரு முறையாவது தங்களது  குல தெய்வ கோவிலுக்கு சென்று வணக்கி வந்தால் மிகவும் சிறந்தது. அதுவும் பங்குனி உத்திரத்தினம் அன்று வணங்கினால்  புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குல தெய்வ வழிபாடு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், இயற்கை செழிக்கவும்  மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது. ஆனால் நமக்கு எந்த வகை வழிபாடு உகந்ததோ அதையே பின்பற்றலாம்.

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.

பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் செழிப்பு அடைந்து மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

அண்ணன் – தம்பி குடும்பத்தினர் எல்லோரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். இது குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழச் செய்யும்.

எனவே குல தெய்வ வழிபாடு என்பது முக்கியம். பங்குனி உத்திரம் அன்று அவரவர்களுடைய குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.

நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரக தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், அதுபோல வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஒருவருக்கு  குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எந்த தெய்வத்தை  வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை.

அதுபோல  குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம்.

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது என்று கிராமங்களில் பேசுவது வழக்கம். அதுபோல ஒவ்வொருவரும் குலதேய்வதை வணங்கி ஆசி பெற்று சிறப்பாக வாழுங்கள்.

பங்குனி உத்திர திருவிழா நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி,  சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட முருகக் கடவுளின்  அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  பழனியின் பிரசித்தி பெற்ற திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருக்கிறார்கள்.

நற்பலன்களை தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதம் மிகவும் முக்கியத்துவமானது.  இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் சொல்கின்றன.

தெய்வீக திருமணங்களான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தது இந்த பங்குனி உத்திதிர தினத்தில்தான்.

உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்துவது இரட்டைச் சிறப்பாகும்.

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாளும் இதுதான். ரதி – மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுவே.

முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.  நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மகாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்றவை நடந்ததும் இந்த பங்குனி உத்திரம் அன்றுதான்.

மகாலட்சுமி அவதாரம் அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள் ஆகும். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றி தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் அணிவித்தார்.

இதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நிகழ்ந்தது.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் திருமண பாக்கியம் உடனே கிட்டும் என்பதும் ஐதிகம்.

உத்திரத் திருநாளான இன்று  ஒவ்வொருவரும்  கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கி ஆசி பெறுங்கள்.