இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : வாகன ஓட்டிகள் வருத்தம்
சென்னை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.02 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரு. 57.41 ஆகவும் இருந்தன. அதன் பிறகு விலைகள் தினமும் அதிகரிக்க ஆரம்பித்தன.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்து தினமும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநில அரசும் மத்திய அரசும் வரியை குறைக்காமல் உள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என பலர் கருத்து தெரிவித்துளனர்.
நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் இருந்தன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தி உள்ளன. பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 பைசாவும் டீசலுக்கு லிட்டருக்கு 20 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் ஆகி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.