முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர்,

மிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி  விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை யிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டியை முன்னிட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை அனைத்து முருகன் கோவில்களும் நடைபெற உள்ளது.

இந்த விழாவானது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறுவது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த திருச்செந்தூர் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி மகேந்திரன் தலைமையில் திருச்செந்தூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரம் காண குவிந்துள்ள பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றத்தில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று சூரசம்ஹாரம் முடிந்ததும், நாளை முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம் என்பது ஐதிகம்.

Leave a Reply

Your email address will not be published.