இன்று கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சென்னை

ன்று தமிழகத்தில் பல கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த 2020ம் ஆண்டு கோலாகலமாகத் தொடங்கினாலும் கொரோனா  பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் கட்டிப் போட்டு விட்டது.  தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இன்று 2021 ஆம் ஆண்டு பிறப்பையொட்டி பலரும் ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டுள்ளனர்.   சென்னையில் தி நகர் பகுதியில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் அதிகாலையில் இருந்தே திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வணங்கி வருகின்றனர்.  இந்த ஆலயம் முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு வண்ண மலர்களாலும் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.  கோவிலில் அதிகாலை முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்தபடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனையும் சாமியையும் வழிபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  தமிழக அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுடன் முகக் கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் தரிசனம் செய்கின்றனர்.