சென்னை:

போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும்முறையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் அனைத்துவிதமான பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வரும் நிலையில், போக்குவரத்து காவல்துறையும் அபராத தொகை டிஜிட்டல் முறையில் வசூலிக்க தொடங்கி உள்ளது.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை போலீசார் மடக்கும்போது, பணம் இல்லாதவர்கள் மிரண்டு வண்டியை ஒட்டுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், காவலர்கள் லஞ்சம் வாக்குவதை ஒழிக்கும் வகையிலும், ஸ்பாட்ஃபைன் முறைக்கு பதிலாக, நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை இன்றுமுதல் போக்குவரத்து துறை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. அதில்,  போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடை முறைப்படுத்தி உள்ளதாகவும்,  போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை தடுக்கும் வகையில்  ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், பேடிஎம் போன்று பல்வேறு வகையில் பணம்செலுத்தலாம்.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்றும், எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

காவலர்கள் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க டிஜிட்டலுக்கு மாறிய போக்குவரத்து துறை….. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாதவர்கள் அபராத பணம் செலுத்த நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என்பது தெரிவித் திருப்பது எந்தவிதத்தில் நியாயம்….  எத்தனை பேர் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அபராதத்தொகையை பணமாக கட்டவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் காரணமாக வாகன ஓட்டிகளின் காலவிரயம் தவிர்க்கப்படும், வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறை யினருக்கும் இடையே ஏற்படும் மோதலும் தவிர்க்கப்படும்  என்றும் பெரும்பாலோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல்துறை வாகன சோதனையில் ஈடுபடும் பகுதிகளில்  நடமாடும் நீதிமன்றத்தையும் அமைத்துள்ளதா என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பபட்டு வருகிறது.