இன்று நடக்கிறது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

டில்லி,

நாடு முழுவதும் இன்று யுபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இன்றைய தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்ப தற்காக, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்தாண்டு 980 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தேர்வு எழுத தகுதியான  6 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல்நிலைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘நாடு முழுவதும் 74 நகரங்களில் இன்று தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.