அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 வருடங்களாக பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அம்மாநிலத்தின் மொத்தம் 182 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14  தேதிகளில்  இரு கட்டங்களாக நடைபெற்றது.

முதல் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதியன்று குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்சி மற்றும் தெற்கு குஜராத்தில் 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன, 2-வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகின.

குஜராத் மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.35 கோடி ஆகும். இவர்களில் 2.97 கோடி இரு கட்ட தேர்தல்களிலும் வாக்களித்தனர். நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.15%; துவாரகாவில் குறைந்தபட்சமாக 59.39% வாக்குகள் பதிவாகின.

முதல் கட்ட தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 443 பேர் சுயேச்சைகள்.

மாநிலத்திலேயே குறைவாக வடக்கு சூரத் தொகுதியில் 1,57,250 வாக்காளர்கள் உள்ளனர். கம்ரேஜ் தொகுதியில் அதிகபட்சமாக 4,28.695 வாக்காளர்கள் உள்ளனர்.

 

இரண்டாம் கட்ட தேர்தலில் 69 பெண்கள் உட்பட 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மகேஷனாவில் அதிகபட்சமாக 34 பேரும் ஜலோட்டில் குறைந்தபட்சமாக 2 பேரும் களம் கண்டனர். இரண்டாம் கட்ட தேர்தலில் சுயேச்சைகள் 851 பேர் போட்டியிட்டனர்.

லிம்கேடா தொகுதியில் குறைந்தபட்சமாக 1,87,245 வாக்காளர்களும் கட்லோடியாவில் அதிகபட்சமாக 3,52,316 வாக்காளர்களும் உள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 1828 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 33 மாவட்டங்களின் 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கடந்த 2007-ம் வருட சட்டசபை தேர்தலில் பாஜக 117; காங்கிரஸ் 59 இடங்களில் வென்றன. ; 2012-ல் பாஜக 119; காங்கிரஸ் 57 இடங்களில் வென்றன.

தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்திலுமே பாஜகவே ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ளன.

குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 92.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதியத்துக்குள் பெரும்பாலான                தொகுதி முடிவுகள் தெரியவந்து, யார் ஆட்சியைப் பிடிப்பார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.