தாஜ்மஹாலை இன்று மட்டும் பெண்கள் ஓசியில் பார்க்கலாம்..

டில்லி

சர்வதேச மக்ளிர் தினத்தையொட்டி இன்று பல முக்கிய இடங்களில் பெண்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தனியாரும், அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு( மகளிருக்கு மட்டும்) இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் இதுவரை யாரையும் இலவசமாக உள்ளே நுழைய விட்டதில்லை.

மகளிர் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக இன்று மட்டும் பெண்கள் இலவசமாக தாஜ்மஹாலைத் தரிசிக்கலாம் என அதனை நிர்வாகம் செய்யும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உள்ளூர் வாசிகள் -அதாவது இந்தியக் குடிமக்கள் ,தாஜ்மஹாலைத் தரிசிக்கக் கட்டணம்- 50 ரூபாய். வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆயிரத்து நூறு ரூபாய்.

வெளிநாட்டுப் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் இன்று அந்த காதல் சின்னத்தை ஓசியில் கண்டு களிக்கலாம்.

இது தவிர, இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி செங்கோட்டை, குதுப்மினார், மாமல்லபுரம் உள்ளிட்ட 142 இடங்களை இலவசமாக இன்று  பார்க்கலாம் என மத்திய சுற்றுலாத் துறை  அமைச்சர் பிரகலாத் பட்டேல் அறிவித்துள்ளார்.

மகளிருக்கு மரியாதை செலுத்தும் முகமாக- சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ரயில்கள், பெண்களால் இயக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்-இந்தியாவும் மகளிருக்குக் கவுரவம் செய்துள்ளது.

ஏர் இந்தியா இன்று மட்டும் 40 விமானங்களைப் பெண்களை மட்டுமே கொண்டு இயக்குகிறது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இதில் அடக்கம்.

டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் இடைநில்லா  (நான் ஸ்டாப்)விமானமும் பெண்களால் இயக்கப்படும்.

எல்லாம் சரி.. பெண்களுக்கு அந்த 33% இட ஒதுக்கீடு என்னாச்சு?

– ஏழுமலை வெங்கடேசன்