பனாஜி:

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் இன்று கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் வாகனம் மற்றும் பிஸ்கட் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், மோடி அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஜிஎஸ்டி வரி போன்றவை காரணமாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் விரோத அறிவிப்புகளும் நான் பொருளா தாரத்தை அதலபாதாளத்தை நோக்கி தள்ளி உள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தி, பிஸ்கட் உள்பட பல்வேறு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பெரும் தொழிலதிபர்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்த பரபரப்பான நிலையில், இன்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.