ன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள்

1.   கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் தனிநபர் கடன் 60% அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்கான கடன்கள் 50% குறைந்துள்ளது.   ஏற்கனவே தனி நபர் கடன்கள் வைத்திருப்பவர்களில் 30% பேர் மேலும் கடன் வாங்கி உள்ளனர்.  வாகனக் கடன் மற்றும் வீட்டுக் கடன் வாங்குவோர் எண்ணிக்கை 19-25% அதிகரித்துள்ளது.

2.   ஆசியாவின் மூன்றாவது காப்பி ஏற்றுமதி நாடான இந்தியாவின் காப்பி ஏற்றுமதி இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் 8.08% அதிகரித்துள்ளது.   சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 1,90,278 டன்னாக இருந்த காப்பி ஏற்றுமதி இந்த வருடம் 2,11,442 டன்னாக அதிகரித்துள்ளது.  காப்பி ஏற்றுமதியாளர்களில் சிசிஎல் பிராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா, டாடா காப்பி, ஒலம் அக்ரோ மற்றும் காப்பி டே குளோபல் லிமிடட் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

3.   கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஆறு மாதத்தில் யூரியா இறக்குமதி 7.25 % குறைந்துள்ளது.  உலகில் யூரியா என்னும் நைட்ரஜனின் அடிப்படையிலான இந்த உரத்தை உபயோகிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.  உள்நாட்டில் இந்த உறம் உற்பத்தி அதிகமானதால் இறக்குமதி குறைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.   ஒரு டன் யூரியா தயாரிக்க ரூ.16000 செலவாகிறது.  ஆனால் சலுகை விலையில் விவசாயிகளுக்கு ஒரு டன் யூரியா ரூ.5360 க்கு விற்கப்படுகிறது.

4.   வரும் 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கபட உள்ள பட்ஜெட்டில் நேரடி வரிகள் குறைக்க வாய்ப்புள்ளதாகவும், ஓய்வூதியம் பெறுவோருக்கும், நிறுவனங்களுக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது தவிர அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரும் திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.

5.   ஜி எஸ் டி உள்வரியை திரும்பப் பெற கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் 10000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அதையொட்டி ஜி எஸ் டி கவுன்சில் உள்வரியை திரும்ப பெற விண்ணப்பிக்கும் நிறுவனம் அந்த உள்வரியானது நிறுவனம் ஜி எஸ் டி க்கு செலுத்திய வரியை விட அதிகமாக இருக்ககூடாது என தெரிவித்துள்ளது.  அதாவது விற்பனை மூலம் ஒரு நிறுவனம் ரூ.100 ஜிஎஸ்டி செலுத்தி இருந்தால் அவர்கள் உள்வரியாக ரூ. 100 அல்லது அதற்குக் கீழ் உள்ள தொகைக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.