லக வரைபடத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் நாளாக இன்று இருக்கலாம். ஆம்… ஈராக்கில் வாழும் குர்தூஸ் இன மக்கள், தங்களது தனி நாடு கோரிக்கைக்காக இன்று( செப்டம்பர் 25, திங்கள்)  வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறார்கள்.

குர்திஸ்தான்

ஈராக்கின் ஒரு பகுதியாக இருக்கும் குர்திஸ்தான் பகுதி, கடந்த இருபது ஆண்டுகளாகவே தன்னாட்சிப் பிரதேசமாக நடைபோட்டு வருகிறது. பல காலமாகவே இவர்கள் தனி நாடு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பலம் மிகுந்த ஈராக் ராணுவத்தை எதிர்த்து இவர்களால் நிற்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹூசைன் குவைத் மீது படையெடுத்தார், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக் மீது படையெடுத்து சின்னாபின்னமாக்கின. சதாமும் தூக்கிலிடப்பட்டார்.

பிறகு, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்தது. இந்த காலகட்டத்தில்தான் குர்திஸ்தான் பகுதி, தைரியமாக தன்னாட்சி பகுதியாக செயல்பட ஆரம்பித்தது.

மசூத் பர்சானி

அமெரிக்க இராணுவம் ஈராக் நாட்டிற்குள் புகுவதற்கான வாசலாக குர்திஸ்தான் இருந்தது. இதற்கு நன்றிக் கடனாக,  அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் ஆயுதங்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதி அளித்தது அமெரிக்கா.  இந்த சூழலை பயன்படுத்தி, குர்திஸ்தான் பகுதி கிட்டதட்ட தனி நாடு போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.

தனிக்கொடி ஏற்றப்பட்டது. தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாக்கப்பட்டன.  “குர்திஷ் தேசிய இராணுவம்” என்று வெளிப்படையான ராணுவமும் செயல்படத்துவங்கியது.

ஆனாலும் இதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆகவே வெளிவிவகார விசயங்களில் ஈராக்கின் முடிவுகளையே குர்திஸ்தான் ஏற்க வேண்டியிருந்தது.

தவிர ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும் போது,  குர்திஷ் பகுதிகளிலும் தேர்தல் நடக்கும். அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் பாரளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொண்டு செயல்பட்டனர்.

ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்

 

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அப்பகுதியில் கோசங்கள் தொடர்ந்து எழுந்துவந்தன.

ஆனால் இதற்கு தடையாக பல விசங்கள் இருந்தன. குறிப்பாக.. எண்ணெய் கிணறுகள்.

ஈராக் முழுவதுமே எண்ணெய் வளம் நிரம்ப உண்டு. அதில் முக்கியமானது குர்திஸ்தான் பகுதி.  இங்குள்ள எண்ணெய் கிணறுகள் யாருக்கு என்பதில் சர்ச்சைகள் நீடிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இந்த நிலையில்தான் குர்திஸ்தான் பகுதியில் தனி நாட்டுக்கு அங்கீகாரம் கோரி பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

நிச்சயமாக, தனி நாட்டுக்கு ஆதரவாகவே குர்திஸ் இன மக்கள் வாக்களிப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இதன் மூலம் தனிநாட்டுக்கான அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஏனெனில் இந்த நிமிடம் வரை, , ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல.. குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது.

அப்படியானால் போர் மூளுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதைப் பொறுத்தே இதற்கு விடை காண முடியும்.

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறியது. இதையடுத்து ஈராக் ராணுவம் மிக பலவீனமாக இருப்பது தெரிய வந்தது.

குர்திஸ்தான் பகுதியில் அரபிகள் சிறுபான்மையினர்

பிறகு,  ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்றது ஈராக் இராணுவம். பிறகு  தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது.  ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம்,  ஐ.எஸ். பயங்கரவாத இயக்குத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.  ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளும் களத்தில் இருந்தன.

இந்த நிலையில், குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் ஏற்கெனவே அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்கிறார்கள்…  அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே குர்தீஸ்களுக்கு தனி நாடு கிடைத்தால் தங்களது நாடுகளிலும் தனி நாடு முழக்கம் பலமடையும் என்று அஞ்சுகின்றன துருக்கியும், ஈரானும்.

தவிர  “சர்வதேச சமூகம்” என்ற அந்தஸ்தில் இருக்கும்  அமெரிக்காவும், பிரான்சும் கூட  குர்திஸ்தானை அங்கீகரிக்க முடியாது என அறிவித்து விட்டன.

இந்த நிலையில், குர்திஸ்தானை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள ஒரே நாடு இஸ்ரேல்தான். குர்திஸ் போராளிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியும், ஆயுதங்களும் தந்து வருவது உலகறிந்த ரகசியம்.

சரி, குர்திஸ்தானுக்குள்ளேயே தனி நாட்டு கோரிக்கைக்கு எதிராக வாக்குகள் விழுமா?

விழும் குர்திஸ்தானஅ பகுதியில் அரேபியரும், துருக்கியரும் ஓரளவு இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் மொழி சிறுபான்மையினர். தனி நாடு உருவானால் தாங்கள் ஒடுக்கப்படுவோமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

இனஅனொரு பக்கம் யேசிடி என்ற மத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனத்தால் குர்தீஸ்கள்தான். ஆனால் மத வேறுபாடு காரணமாக தாங்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுவோமோ என்று பயப்படுகிறார்கள்.

1988ல் குர்திஸ் பகுதியில் ஈராக் ராணும் நடத்திய தாக்குதலின் போது..

இவர்களும் தனி நாடு கோரிக்கைக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

தவிர குர்திஸ்தானில் தற்போது ஆளும் சக்திகளுக்கு எதிரான குர்திஸ் மக்களும் இருக்கிறார்கள். அதாவது தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது லஞ்ச ஊழல்களை மறைக்கவே தேசிய உணர்வை தூண்டி விட்டு பொதுவாக்கெடுப்பு நடத்துகிறார்கள் என்பது இவர்களது வாதம். இவர்களும் எதிராகவே வாக்களிப்பார்கள்.

இன்னொரு விசயமும் கவனிக்கத்தக்கது. குர்தீஸ் இனத்துக்குள்ளேய பல இனக்குழுக்கள் உண்டு. தற்போது   குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, அங்கு பலமாக உள்ள  பர்சானி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். இவர் தனது தனது இனக்குழுவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற புகார் உண்டு.

ஆக எதிர்த்து வாக்களிப்போரும் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் இது குறைவான அளவே இருக்கும்.

1988 தாக்குதல் நினைவாக வைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று..

1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து ஹலாப்ஜா படுகொலைகள் தினம் வருடம் தோறும் நினைவுகூறப்படுகிறது. இந்த இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மக்களின் தேசிய உணர்வு தூண்டப்பட்டு பெரும்பாலோர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

ஆனால் தனி நாடு என்று அறிவிக்கப்பட்டால் ஈராக் தேசியபடை குர்தீஸ் மீது படையெடுக்கும். குர்தீஸ்தானின் தனி நாடு கோரிக்கையை (இஸ்ரேல் தவிர) உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆகவே அப்படையெடுப்பை தீவிரவாதிகள் மீதான தாக்குதலாகவே உலக நாடுகள் பார்க்கும்.

ஆகவே 2009ம் ஆண்டு இலங்கை வடபகுதியில்  நடந்ததைப்போல குர்திஸ்தானில் இனப்படுகொலைகள் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.