சென்னை

மிழகத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை நாடெங்கும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளன.   அந்த சுங்கச்சாவடி வழியே செல்லும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.    நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.   ஆத்தூர், பூதக்குடி, சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரணூர், ஸ்ரீபெரும்புதூர்,  வாணியம்பாடி மற்றும் சூரப்பட்டி உள்ளிட்ட பல சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர், “இந்த கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாகும்.  பல இடங்களில் 2% மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த கட்டணம் மாதாந்திர பாஸ் வாங்குவோருக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.   சில இடங்களில் சாலை விரிவாக்கம் நடைபெற உள்ளதால் அங்கு மட்டும் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வராது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் துணை செயலர் சுப்ரமணி, “ஜிஎஸ்டி அமுலாக்கம் மற்றும் கணக்கு வருட முடிவு, தேர்தல் நடைமுறைகள்,  போக்குவரத்து அதிகாரிகள் சோதனை என பல இனங்களில் போக்குவரத்து மிகவும் தடைபட்டு தாமதம் ஆகிறது.    ஆகவே சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம் இந்நிலையில் சுங்கக் கட்டண உயர்வு எங்களுக்கு மேலும் சுமையை தரும்” என தெரிவித்துள்ளார்.