சென்னை: மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவுக்குள் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதியை மீறி, சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் வசூலிக்கப்படும் சுங்க வசூலை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன்  கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மாநகராட்சி எல்லை மற்றும் நகராட்சி எல்லைக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூல் நிர்ணய விதி 2008 தெளிவாக கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த பல கிராமங்கள் சென்னை மாநகராட்சிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வருகிறது.ராஜிவ்காந்தி சாலை அதாவது பழைய மகாபலிபுரம் ஐடி எஸ்க்பிரஸ் சாலையில் கடந்த 2000ல் அமைக்கப்பட்ட ஐடி தொழிற்சாலைகள் உரிய அடிப்படை கட்டமைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றன.இந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இந்த சாலைகளில் செல்பவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பது விதிமுறைகளுக்கு முரணானது, ஏற்க முடியாதது.

உதாரணமாக ராஜிவ் காந்தி சாலையில் ஐடெல் நிறுவனம் வரை 5 சுங்க சாவடிகள் உள்ளன.

பெருங்குடி சீவரம் நுழைவு சுங்க சாவடி, ஏகாட்டூரில் வெளியேறும் சுங்க சாவடி, துரைப்பாக்கம்-பல்லாவரம் சுற்று வட்ட சாலையில் உள்ள சேட்டிலைட் சுங்க சாவடி, சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் இணைப்பு சாலை சேட்டிலைட் சுங்க சாவடி, சோழிங்கநல்லூர்-கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை (கலைஞர் கருணாநிதி சாலை) சேட்டிலைட் சுங்க சாவடி ஆகிய இடங்களில் மக்களிடமும், தொழிலாளர்களிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூல் விதிகளில் சுங்க சாவடிகளுக்கு இடையே 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், இந்த சுங்க சாவடிகள் அமைப்பில் விதிகள் பின்பற்றப்படவில்லை.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி கிராமம் சென்னை மாநகராட்சிக்குள் வருகிறது. இந்த நிலையில் உத்தண்டியில் சுங்க கட்டணம் வசூலிப்பது நெடுஞ்சாலை விதிகளுக்கு முரணானது.

தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு புறம்பாக உள்ள சுங்க சாவடிகளை வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆணைய கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண விதிகளின்படி அமைக்கப்படாத சுங்க சாவடிகளை கண்டறிந்து அவற்றை 2 ஆண்டுகளுக்குள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, இவற்றை கருத்தில்கொண்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அந்த சுங்க சாவடிகளை மூட வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.