ஓ எம் ஆர் சுங்கச்சாவடிகளில் 10% கட்டண உயர்வு

சென்னை

சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10% உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன.   மத்திய அரசின் அனுமதிப்படி இந்த சுங்கச் சாவடிகளின் கட்டணம் ஆண்டுக்கு 10 முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது.   இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதே  போல் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளில் சுங்கச் சாவடிகள் உள்ளன.    இந்தச் சுங்கச் சாவடிகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.

அதற்கிணங்க கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்பட்டது.    இதற்கு பொதுமக்களும் சரக்கு வாகன ஓட்டிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.     சரக்கு வாகன ஓட்டிகள் இந்தக் கட்டண உயர்வால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து போராடி வருகின்றனர்.

தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வரும் 1 ஆம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.    இந்த சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை, மேடவாக்கம், நாவலூர் ஆகிய ஐந்து இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன.

You may have missed