துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு, 800 பேர் காயம்…

இஸ்தான்புல்: மேற்காசிய நாடான துருக்கி, கிரிஸ் நாடுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சாமோசுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.  இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 800ஆக உயர்ந்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கில் உள்ள இஸ்மிர் மாகாணத்தில், 20க்கும் மேற்பட்ட கட்டடங்கள், இடிந்து விழுந்தன.  இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் நகரத்துக்குள் புகுந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இது ஒரு மினி சுனாமி என்று அச்சத்துடன் தெரிவித்தனர். ஆறு போல நகரத்துக்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் பீதியடைந்தனர். மேலும் பயங்கர நிலநடுக்கத்தால் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து பலத்த சேதமடைந்தன. அங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.
முதல் கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது, துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 800க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  38 ஆம்புலன்ஸ்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும், 35 மருத்துவ மீட்புக் குழுக்கள் உதவியுடன், காயமடைந்தோர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். , சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.