தொடரும் விலை சரிவால் அதிருப்தி: பாலக்கோடு சந்தையில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்

தர்மபுரி: தொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, செல்லியம்பட்டி, புலிக்கரை, பஞ்சப்பள்ளி, அரூர், மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. புரட்டாசி விரதம் காரணமாக, காய்கறிகளின் விலை கணிசாமாக உயர்ந்தது.

புரட்டாசியில், ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இப்போது படிப்படியாக குறைந்து உள்ளது.  இந்த மாத துவக்கத்தில் அதன் விலை மேலும் குறைந்து  ஐந்து ரூபாய் வரை விற்பனையானது.

ஆகையால், சாகுபடி செய்த விவசாயிகள், தக்காளியை பறிக்காமல் வயலிலேயே அழித்து வருகின்றனர். சிலர், பறித்த தக்காளிகளை, போதிய விலை கிடைக்காத விரக்தியில், சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இந் நிலையில் தொடரும் விலை சரிவால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், இடைத்தரகர்களை கண்டித்தும் அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர்.