சென்னை:

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டும் இயங்கும் என்றும், மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிக பாதிப்புக்குள்ளாகி வரும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இடையில் 21ந்தேதி மற்றும் 28ந்தேதி எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று  20–ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 22–ந்தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

நாளை பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு ஊரடங்கையொட்டி சென்னையின் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்பட முக்கிய சாலைகளில்   ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும்,  டிரோன் கேமரா, சிசிடிவி கேமிரா மூலம் தீவிர வாகன சோதனை மூலமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பொறுத்தவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் 280-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. . செங்கல்பட்டு–பரனூர், திருவள்ளூர்–திருமழிசை, எளாவூர், நல்லூர், ஆர்.கே.பேட்டை பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இ–பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை காணமுடியவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று 2வது நாளாக முழு ஊரடங்கின் 2வது நாளிலும் சாலைகள் வெறிச்சோடியது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சாலை உள்பட சென்னை நகரின் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

சாலைகளில் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியர்களின் பணியாளர்கள் மட்டுமே வெளியே வந்தார்கள். மளிகை கடைகள், மருந்து கடைகள், குறைந்த அளவில் பல்பொருள் அங்காடிகள், அரிசிக் கடைகள், காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு பிற்பகல் 2 மணியோடு மூடப்பட்டுவிட்டன.