நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை)

அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள் வரலட்சுமி விரதம்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாகப் பாடியிருக்கிறார்.
வரலட்சுமி விரதத்துக்குப் புராணக் கதைகள் பல உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள்.  சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள்.
அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்குச் சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியைப் பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தில் வைத்த அரிசியை வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரட்டைக் கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

அனைவருக்கும் இனிய வரலட்சுமி விரத .நல்வாழ்த்துக்கள்