அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தின அமைதிப் பேரணி நாளை நடைபெறுகிறது

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நினைவு தினத்தை ஒட்டி நாளை அதிமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். சுமார் 75 நாட்களுக்கு மேல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுவிசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளை அவர் மரணம் அடைந்து இரு வருடங்கள் முடிவடைவதால் நினைவு தினத்தை ஒட்டி அதிமுக சார்பில் நாளை காலை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதிப் பேரணி ஒன்று நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் இந்தப் பேரணி கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவு பெறுகிறது. அங்கு அதிமுகவினர் உறுதிமொழி ஏற்கின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் அமைதிப் பெரணி நடைபெற உள்ளது. அந்த அமைதிப்பேரணி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.