டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தம்பிதுரை  தெரிவித்துள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில்  நாடாளுமன்ற மேலவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார். அப்போது  வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில்  வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு அதிமுக எம்.பிக்கள் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தம்பிதுரை, “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி அதிமுக எம்.பி.க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மக்களவையில் அளிக்கப்பட்டு உள்ளது.

முதலில் திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றட்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும். தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்  கூறியுள்ளேன்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவராக  இருக்கிறார். காவிரி விவகாரத்தில் திமுக எம்.பிக்கள் முதலில் ராஜினாமா செய்ய முன்வரட்டும். அ.தி.மு.க எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் எங்கள் தலைவர்  கிடையாது.  அ.தி.மு.க எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து  தலைமைதான் முடிவு எடுக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  மத்திய அரசைக் கண்டித்து நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்  நடத்துவோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தமிழக எம்பிக்களுக்கும் அழைப்பு விடுப்போம்” என்று தெரிவித்தார்.

இன்று  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.